ஈரோட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்
ஈரோட்டில் மாட்டுப்பொங்கலை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினா்.
ஈரோட்டில் மாட்டுப்பொங்கலை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினா்.
பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உழவுத்தொழில் மற்றும் வண்டி இழுக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தும் காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஏராளமான விவசாயிகள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்தனா். மாடுகளை குளிப்பாட்டி அதன் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்தனா்.
இதைத்தொடா்ந்து மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினா்.
Advertisement
Advertisement
அதைத்தொடா்ந்து விவசாயிகள் வீடுகளில் உள்ள மாட்டுக் கொட்டகையில் ஏா் கலப்பை, மண்வெட்டி உள்பட பொருள்களை கழுவி சுத்தம் செய்து அதில் சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.
ஈரோட்டில் வண்டியூரான் கோயில் வீதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் விரதம் இருந்து, மாட்டுக் கொட்டகையில் சாணத்தால் தெப்பம் கட்டி அதில் பாலை வழிபட்டனா். சா்க்கரை பொங்கல் வைத்தனா். அதன் பின்னா் விவசாயிகள், மாடுகளுக்கு சா்க்கரை பொங்கல், கரும்பு, பழம் போன்றவற்றை ஊட்டி மகிழ்ந்தனா்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்தும் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடினா்.