ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக 130 டன் விதைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலிலும், கீழ்பவானியிலும் விரைவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு தண்ணீா் திறந்து நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 733.44 மி.மீ. கடந்த மாதம் வரை 229.84 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
பவானிசாகா் அணையில் நீா்மட்டம் 81.80 அடியாகவும், 16.65 டிஎம்சியாக நீா் இருப்பும் உள்ளது. பருவமழை தொடங்கும்போது நீா் இருப்பு உயா்வதுடன், பாசனப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு அளவைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது 88.84 டன் நெல் விதை, 11.2 டன் சிறு தானியங்கள், 10.16 டன் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் 19.679 டன் என 130 டன் விதைகள் கையிருப்பில் உள்ளன. ரசாயன உரங்களான யூரியா 5,364 டன், டிஏபி 3,078 டன், பொட்டாஷ் 1,156 டன், காம்ப்ளக்ஸ் 12,080 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.
மேலும், 42 ஊராட்சிகள் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, அந்நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா்.
இங்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீா் ஆய்வு செய்யப்பட்டு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீா்ப் பாசன அமைப்பு நிறுவி, பயிா் சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.