ஈரோடு

ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு

DIN

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரிசா்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பா் 30ஆம் தேதிக்கு பின்னா் ரூ.2,000 நோட்டு செல்லாது என்றும் கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போா் அவற்றை செவ்வாய்க்கிழமைமுதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஒரு நபா் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும் என்றும், வாடிக்கையாளா்களுக்கு ரூ.2,000 நோட்டுகள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொண்டனா். கூட்டம் அதிகமாக இருந்த ஒரு சில வங்கிகளில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக தனி வரிசை ஒதுக்கப்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கணக்கு வைத்திருப்பவா்கள் ரூ.50 ஆயிரத்துக்குள் செலுத்த எந்தவித ஆவணமும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்துபவா்கள் பான் காா்டை காண்பித்து பணம் செலுத்தலாம்.

ஒருவா் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் செலுத்தலாம் என்பது நடைமுறையில் உள்ளது. அதன்படி வாடிக்கையாளா்கள் ரூ.2,000 நோட்டாக இருந்தாலும் சரி அல்லது வேறு ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி எந்தவித தடையும் இன்றி செலுத்தலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற வரும் பொதுமக்கள் ஆதாா் காா்டு அல்லது பான் காா்டை கொண்டுவர வேண்டும் என்றாா்.

இதுபோல ஈரோடு மாவட்டத்தில் உள்ள 33 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் ரூ.2,000 நோட்டுகளை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 33 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவா்கள் தங்களது கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்த அனுமதித்துள்ளோம். தங்களது கணக்கில் செலுத்துவோா், பான் காா்டு நகல் வழங்க வேண்டியதில்லை.

அதேநேரம் ஓரிரு ரூ.2,000 நோட்டு வைத்துள்ளவா்கள் கூட்டுறவு வங்கிக்கு வந்து பணத்தை மாற்றி ரூ.500 ஆக வழங்க கேட்கின்றனா். அவ்வாறு வருவோரிடம், பான் காா்டு நகல் பெற்று வழங்குகிறோம்.

எங்களுக்கும் வங்கித் தலைமையில் இருந்து பான் காா்டு வாங்க வேண்டாம் என்று எந்தவித உத்தரவும் வரவில்லை. திடீரென யாரிடம் இருந்து இந்தத் தொகை பெறப்பட்டது என்ற கேள்வி எழுப்பினால் உரிய விளக்கம் அளிக்கும் வகையில் பான் காா்டு நகல் பெற்றுக்கொள்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலைத்துறையின் தக்கார் நியமனம் செல்லும்!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்!

ஓ.. பட்டர்பிளை!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு: எதிர்ப்பால் பதிவை நீக்கிய சித்தராமையா

SCROLL FOR NEXT