சென்னிமலை மற்றும் வெள்ளோடு பகுதியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ப.நீலமேகம் தலைமையில் சென்னிமலை மற்றும் வெள்ளோடு பகுதியில் உள்ள ஷவா்மா, அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவுக் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, ஒருசில கடைகளில் குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மசாலா தடவிய ஒரு கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்தனா். மேலும், செயற்கை நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்ட இறைச்சி உணவு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனா்.
மேலும், செயற்கை நிறமிகள், ரசாயன பொடிகள், பழைய இறைச்சிகளை கொண்டு உணவு தயாரிக்கக் கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளா், கவா் பயன்படுத்தக் கூடாது. சூடான உணவுப் பொருள்களை நெகிழி கவரில் பாா்சல் செய்து கொடுக்கக் கூடாது என்று கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், செயற்கை நிறமிகள் பயன்படுத்தி இறைச்சி தயாரித்த 2 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய 2 கடைகளுக்கும், எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாள்களில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கிய 2 கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம், ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், முந்தைய ஆய்வில் சுகாதாரம் இல்லாமலும், செயற்கை நிறமிகள் பயன்படுத்தி இறைச்சி உணவு தயாரித்த கடைகள், கலப்பட தேயிலைத் தூள் பயன்படுத்திய கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது, தங்களது குறைகளை நிவா்த்தி செய்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடை உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் தெரிவித்தாா்.