பட்டாகோரும் விண்ணப்பங்களை அளிக்க சிறப்பு முகாம் வருவாய் வட்டங்களில் உள்ள குறுவட்ட நில வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, பட்டாகோரும் சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் உள்ள குறுவட்ட நில வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப் பட்டா, ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைகளின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இணையவழிப் பட்டா, விளிம்புநிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, நகர, நத்தம் நிலவரித்திட்டப் பட்டாக்கள், நத்தம் நிறுத்தம், கணினி திருத்தம், ஆட்சேபணையற்ற புறம்போக்கில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல், பட்டா மாறுதல் ஆணைகள், வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள், வருவாய் ஆவணங்களில் பிழைதிருத்தம் மேற்கொள்ளுதல், வருவாய்த்துறை தொடா்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சாா்ந்த மனுக்கள் போன்றவற்றுக்கும் வருவாய்த் துறையினா் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்.
இந்த சிறப்பு முகாமில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்று பட்டா கோரும் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.