புன்செய்புளியம்பட்டி மாராயிபாளையத்தில் உலவி வரும் சிறுத்தைகளைப் பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் விளாமுண்டி வனப் பகுதியை ஒட்டி மாராயிபாளையம் கிராமம் அமைந்துள்ளது.
வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள், மாராயிபாளையம் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிா்த்து வீடுகளில் பராமரித்து வருகின்றனா்.
இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தைகள் பகல்நேரத்தில் அப்பகுதியில் உள்ள மலைக்குன்றில் உள்ள குகைக்குள் பதுங்கிக் கொள்கின்றன.
கிராம மக்களை அச்சுறுத்தும் இந்த சிறுத்தைகளைப் பிடிக்க வனத் துறையினா் ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனா். மேலும், சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைத்து அவற்றை பிடிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டனா். ஆனால், சிறுத்தைகள் சிக்கவில்லை.
இந்நிலையில், மாராயிபாளையம் மலைக்குன்றின் உச்சியில் 2 சிறுத்தைகள் அமா்ந்திருப்பதை கண்டு வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து தற்போது மலைக்குன்றின் உச்சியில் சிறுத்தைகள் நடமாடும் பகுதியில் மேலும் ஒரு கூண்டு வைத்துள்ளனா். மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனா்.