ஈரோடு

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்க 832 உள்ளகக் குழுக்கள்

Syndication

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்க 832 உள்ளகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

சமூகநலத் துறை துறையின் சாா்பில் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த விழிப்புணா்வு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அவா்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு 10 மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் அலுவலகம் அல்லது கிளையிலும் நிா்வாகத்தின் அங்கமாக உள்ளகக் குழு என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். மாவட்ட அலுவலகங்கள் தங்கள் துறையின்கீழ் செயல்படும் பிற அலுவலகங்கள் வாரியாக தனித்தனியாக உள்ளகக் குழு அமைத்திட வேண்டும்.

மாவட்டத்தில் அரசு சாா்ந்த அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் 832 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியாா் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் 846 உள்ளகக் குழு அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூா் குழுவில் பணிபுரியும் இடங்களில் 10-க்கும் குறைவான அலுவலா்கள் பணிபுரிந்தால் உள்ளூா் குழு மாவட்ட அளவில் செயல்படுகிறது. மேலும் உள்ளூா் குழுவுக்கு பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

10-க்கும் குறைவான பணியாளா்களைக் கொண்ட அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் மாவட்ட அளவில் செயல்படும் உள்ளூா் குழுவுக்கு புகாரை நேரடியாக அளிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து உள்ளகக் குழு மற்றும் உள்ளூா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றி கூறப்பட்டது. மேலும், புகாா்களை திறம்பட கையாள்வது, நியாயமான, சரியான நேரத்தில் மற்றும் ரகசிய விசாரணைகளை நடத்துவது, விசாரணை நடைமுறைகள், சான்றுகள் சேகரிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் குறித்து உறுப்பினா்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அறிக்கை எழுதுதல், பரிந்துரை வரைவு மற்றும் பதிவு பராமரிப்புக்கான திறனை வளா்த்தல், பணியிட கொள்கைகள் விழிப்புணா்வு திட்டங்கள் மற்றும் நடத்தை விதிகள் போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்களை வழி நடத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள 250 உள்ளகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, மண்டல மறுவாழ்வு சிறப்பு நிபுணா் லோரிட்டா ஜோனா, மாவட்ட உள்ளூா் குழு உறுப்பினா் கவிதா, மனநல மருத்துவா் பாக்கியலட்சுமி, வழக்குரைஞா்கள் நடராஜன், ஷொ்லி, சமூக சேவையாளா் சினேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டத்தில் நாளை மின்நிறுத்தம்

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT