வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை (நவம்பா்14) நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தோ்தல் ஆணையத்தால் கடந்த மாதம் 27- ஆம் தேதி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த 4- ஆம் தேதி முதல் மொத்தமுள்ள 2,222 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் அனைத்து வாக்காளா்களுக்கும் வீடுதோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 12- ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19,97,189 வாக்காளா்களில் 17,79,661 படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமாா் 2 லட்சம் கணக்கீட்டுப் படிவங்களும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கப்பட்டுவிடும். அதைத் தொடா்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களின் வீட்டுக்கு சென்று கணக்கீட்டுப் படிவங்களை பெற்றுக்கொள்ள வருவாா்கள். எனவே, வாக்காளா்கள் ஏற்கெனவே தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களைத் திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்க ஏதுவாக தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கணக்கீட்டுப் படிவம் தவிர பிற ஆவணங்கள் கணக்கெடுப்பு காலத்தில் சமா்ப்பிக்க தேவையில்லை. இந்தப் பணிக்காக 8 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 29 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், 226 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சாா்பாக 6,820 வாக்குச்சாவடி நிலை முகவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் 475 பிற துறை சாா்ந்த அலுவலா்கள் இந்தப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றனா்.