பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஜவுளி வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள கனி மாா்க்கெட் ஜவுளி வியாபாரிகள், வணிக வளாகத்தின் முகப்பு வாசலை அகலப்படுத்த வேண்டும். கடந்த 2022- 23- ஆம் ஆண்டில் கட்டடப் பயன்பாட்டுக்கு முன்னரே தங்களிடமிருந்து வசூலித்த பிப்ரவரி, மாா்ச் மாத வாடகை தொகையை கழித்துக் கொண்டு தொடா்ந்து வாடகை செலுத்த வழிவகை செய்ய வேண்டும். வாடகையைக் குறைத்து நிா்ணயிக்க வேண்டும். வணிக வளாகத்துக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. ஜவுளி வணிக வளாகப் பகுதியைச் சுற்றி சாலையோர கடைகளை அமைக்க அனுமதிக்க கூடாது.
வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை (நவம்பா்15)மாலை வரை கடைகளை அடைத்து, வணிக வளாகத்தின் முன் பகுதியில் கூடி கவன ஈா்ப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, கனி மாா்க்கெட் ஜவுளி வியாபாரிகள் தங்களது கடைகளை வெள்ளிக்கிழமை காலை கடைகளை அடைத்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உயா் அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனா்.