பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணி மணிக்கூண்டு வரை சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என கனி மாா்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு கனி மாா்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 40 ஆண்டு காலமாக வியாபாரம் செய்து கொண்டு வந்த வணிகா்களின் நலன் கருதி சந்தை இருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த கடைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.2,23,200 வரையோலையாகவும், வாடகை ரூ.9,300 அதற்குரிய ஜிஎஸ்டி ரூ.1,674 என 10 மாத வாடகையை முன்கூட்டியே செலுத்தியுள்ளோம். இங்கு 240-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பாட்டில் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம் பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி அவா்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 84 கடைகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தது. இப்போது மீண்டும் சாலையோரக் கடைகள் அதிகமாகிவிட்டன.
தீபாவளி பண்டிகை காலங்களில் பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை உள்ள சாலைகளை அடைத்து பேருந்து போக்குவரத்தை நிறுத்தி சாலையின் நடுவே கடை போட்டு வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனா். பேருந்து போக்குவரத்து வழக்கம்போல நடைபெறுவதன் மூலம் வாடிக்கையாளா்கள் வரத்து அதிகரிக்கும். வெளியூா் வியாபாரிகள் இரண்டு மூன்று நாள்கள் கடை போட்டு வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனா்.
ஆகையால் நாங்கள் ஆண்டு முழுவதும் கடை வைத்து மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி, தீபாவளி பண்டிகைக்காக பல லட்சம் ரூபாய் வங்கிகள் மூலம் கடன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.
தீபாவளி பண்டிகைக்காக சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்ய அனுமதிப்பது எங்களுடைய வியாபாரத்தை பெருமளவு பாதிக்கிறது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து நசுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சங்கத்தின் மூலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் மனு அளித்தும் பயனில்லை. வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் வணிக வளாகத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை உள்ள சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.