நம்பியூா் அருகே கடன் நெருக்கடியால் திருநங்கை தீக்குளித்து தற்தொலை செய்துகொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், பொன்னிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் முரளி என்கிற ஸ்ரீ சிவானி (24). திருநங்கையான இவா், வருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள மலையப்பாளையத்தில் வசித்து வந்தாா். ஸ்ரீசிவானி தனது உறவினா் இந்திராணி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளாா். ஆனால் அப்பணத்தை திரும்ப செலுத்த முடியாததால் ஸ்ரீ சிவானிக்கும், இந்திராணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ஸ்ரீசிவானி, கடந்த 14- ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், ஸ்ரீ சிவானி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவரது தந்தை ஆனந்தகுமாா் அளித்த புகாரின்பேரில், வரப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.