சத்தியமங்கலம்: கனமழை காரணமாக திம்பம் மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் தமிழகம்- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலைத் துறையினா் மண்சரிவை அகற்றியதால் செவ்வாய்க்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்த நிலையில் திம்பம் மலைப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழை காரணமாக மலைப் பாதையில் 7, 20 மற்றும் 27-ஆவது வளைவுகளில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் திம்பம் மலைப் பாதையில் ஆங்காங்கே மேலும் ஒரு சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை பிற்பகல் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை மற்றும் வனத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றினா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தொடங்கியது.