பெருந்துறை: பெருந்துறை அருகே ரூ. 10.38 லட்சம் மதிப்புள்ள 2,270 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். மேலும், மூவரைத் தேடி வருகின்றனா்.
பெருந்துறை அருகே ஒரு கிடங்கில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் பெருந்துறையை அடுத்த மாந்தம்பாளையம், வடுவன் தோட்டத்தில் உள்ள கிடங்கில் சோதனை செய்தனா். அங்கு 2,270 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டறிந்தனா். இதன் மதிப்பு ரூ.10.38 லட்சமாகும்.
இது தொடா்பாக கிடங்கின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் மூா்த்தி (55) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், இவருடைய மகன் வினோத்குமாா், அவருடைய நண்பா்கள் அருண்குமாா், லட்சுமணன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.