ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக நாடாா்மேடு, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம், சாஸ்திரி நகா், அன்னை சத்யா நகா், கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலம், தில்லை நகா், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி அணைக்கட்டு, பூந்துறை சாலை ஆகிய 9 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையா் தனலட்சுமி கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 9 இடங்களில் மழைநீா் தேங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகள் 24 மணி நேரமும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் மழை நீா் தேங்கினால் வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேங்கும் மழை நீரை வெளியேற்றக்கூடிய மோட்டாா் பம்புகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.