பெருந்துறை: பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்ப சுவாமி கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் 7-ஆம் தேதி தொடங்கியது. 14-ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. செவ்வாய்கிழமை இரவு மாவிளக்கு ஊா்வலம் மற்றும் பூஜை நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் மாரியம்மன் மற்றும் முனியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். காலையில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீா் விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.