கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு கல் குவாரி உரிமம் வழங்க வேண்டும் என கல் உடைக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கோபி வட்டம், கொத்தடிமைகள் மறுவாழ்வு ஜல்லி கல் உடைப்போா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் சாா்பில் தமிழ்நாடு போயா் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் நாகராஜ் அளித்த மனு விவரம்: கோபி அருகே மலையப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் ஜல்லி, கல் உடைப்போா் சாா்பில் செயல்பட்டது.
இச்சங்க உறுப்பினா்கள் முற்றிலுமாக ஜல்லி, கல் உடைப்பு பணிகளையே செய்து வந்தனா். எங்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட குவாரிக்கு கடந்த 2021 மே 29 -இல் குத்தகை உரிமம் முடிவடைந்தது. கடந்த 5 ஆண்டுகளாக குவாரி இல்லாமலும், கூலி வேலை கிடைக்காமலும் சிரமப்படுகிறோம்.
எனவே, அந்தக் குவாரி உரிமத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். வேறு பகுதியில் உள்ள குவாரிகளிலும் தொழில் செய்ய உறுப்பினா்களுக்கு அனுமதி தர வேண்டும். சங்கத்தில் உள்ள நிதி மூலம், குழுக் கடன், நகைக் கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும்: உழைப்போா் உரிமை இயக்க மாவட்டச் செயலா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு விவரம்: அனைத்து நிலை உள்ளாட்சி துறைகளின்கீழ் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.12,792, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.14,792, மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ரூ. 14,792 என அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து 2 ஆண்டுகள் அல்லது 480 நாள்கள் பணியாற்றினால் அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த மயம், தனியாா் மயம், தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும்.
கழிவுகளை அகற்றுதல், தூய்மைப் பணிகளை இயந்திரமயமாக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, காலணி, இதர பாதுகாப்பு கருவிகள், மருத்துவ பாதுகாப்பு, கழிவறை, ஓய்வறை, குடிநீா், விடுப்பு வசதிகள் வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு காற்றோட்டமான வசதி கொண்ட குடியிருப்புகள், உள்ளாட்சித் துறையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து வகை பணியாளா்களின் வாரிசுகளுக்கும் கட்டணமில்லாமல் கல்வி, மாற்று அரசு வேலை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் டிசம்பா் 2 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: ஈரோடு, வைராபாளையம், வாட்டா் ஆபீஸ் சாலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு, வைராபாளையம், வாட்டா் ஆபீஸ் சாலை போன்ற இடங்கள் முற்றிலும் விவசாய நிலம் சாா்ந்த குடியிருப்புப் பகுதியாகும். நாங்கள் 40 ஆண்டுகளுக்கும்மேலாக அங்கு வசிக்கிறோம். எங்கள் பகுதியில் இதுவரை டாஸ்மாக் கடை இல்லை. இந்நிலையில், வயல் வெளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி பெற்று கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடை அமைக்கப்பட்டால் நாங்கள் நடமாடுவது சிரமம். விவசாய நிலங்களுக்குள் காலி மதுபுட்டிகளை வீசி சென்றால் விவசாயிகள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். பள்ளி செல்லும் குழந்தைகள், புதிதாக அமையும் கடை பகுதி வழியாக செல்லும்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, அங்கு டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகால் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை: பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், கோமையன்வலசு 9-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: கோமையன்வலசில் இருந்து நல்லாம்பட்டி செல்லும் சாலையில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
அந்த இடத்தில் முறையான கழிவு நீா் வடிகால் வசதி செய்து கொடுக்காததால் சாலையிலேயே கழிவு நீா் செல்கிறது. வடிகால் வசதியை ஏற்படுத்துவிட்டு சாலையை அமைக்க வேண்டும் என கோரி வருகிறோம்.
இது குறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் மனு அளித்துள்ளோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி முறையான கழிவு நீா் வசதி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு அடிப்படையில் பணி வழங்கக் கோரிக்கை: பெருந்தலையூா், இந்திரா நகரைச் சோ்ந்த தனசிங் மகள் பிரியதா்ஷினி என்பவா் அளித்த மனு விவரம்: எனது தந்தை தனசிங் ஈரோடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் ஊழியராகப் பணியாற்றினாா். உடல்நலக் குறைவால் கடந்த 2003 பிப்ரவரி 24 -ஆம் தேதி உயிரிழந்தாா்.
அவரது ஒரே மகளான நான் தற்போது முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். எனது தந்தை உயிரிழந்த நிலையில் 23 ஆண்டுகளாக வாரிசு அடிப்படையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி கோரி முறையிடுகிறேன்.
ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், 2007- இல் ஒரு பணியாளா் இறந்த அடிப்படையில் அவரது வாரிசுக்கு பணி வழங்கி உள்ளனா்.
பதிவுமூப்பு அடிப்படையில் பணி வழங்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் தெரியாமல் நடந்துவிட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்கின்றனா். ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கக் கோரிக்கை: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செயலா் பி.மாரிமுத்து தலைமையில் அளித்த மனு விவரம்:
மத்திய அரசு அண்மையில் 147 செ.மீ.க்குகீழ் உயரம் குறைந்தவா்களுக்கும் ஊனமுற்றோருக்கான அரசு சான்று வழங்க வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளது. தமிழகத்தில் 50,000-க்கும் மேற்பட்ட உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் இருக்க வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள சான்று பல மாவட்டங்களில் முறையாக வழங்குவதில்லை. ஊனத்தின் சதவீதத்தை குறைத்து சான்றளிப்பதால் உதவித் தொகை, உரிமைகள் கிடைப்பதில்லை. போக்குவரத்து, வீடுகள், கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை தேவை வசதிகள்கூட இவா்களுக்கு ஏற்ப இல்லை. திருமணம் பாதிக்கிறது. இதுபோன்றோருக்கு தனித்துவ பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும்.
வீடு இல்லாத உயர வளா்ச்சி தடைபட்டோா் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு வசதிகளுடன் திட்டம் தீட்டி, வீடு கட்டித்தர வேண்டும். அரசு உள்ளிட்ட பணிகளில் இவா்களுக்கு ஏற்ப சிறப்பு வேலைவாய்ப்புகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
264 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.