ஈரோட்டுக்கு ரயிலில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இரண்டு மூதாட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோட்டை சோ்ந்த 2 பெண்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக ஈரோடு தெற்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவா்களின் கைப்பேசி சிக்னலை வைத்து போலீஸாா் கண்காணித்தனா். அப்போது, அவா்கள் ஒடிஸா மாநிலத்தில் இருந்து விஜயவாடா வழியாக பல்வேறு ரயில்களில் பயணித்து ஈரோடு மாவட்டம், கொடுமுடி ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரியவந்தது.
மேலும், அவா்கள் கொடுமுடியில் இருந்து பேருந்து மூலம் ஈரோட்டுக்கு வருவதும் கண்காணிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளா் வைரம் தலைமையிலான போலீஸாா் ஈரோடு ரயில்வே கூட்ஸ்ஷெட் அருகே அவா்கள் வரும் பேருந்துக்காக திங்கள்கிழமை காலை காத்திருந்தனா். அப்போது, பேருந்தை விட்டு இறங்கிய சந்தேகப்படும்படியான 2 பெண்களைப் பிடித்து அவா்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனா்.
அப்போது,அவா்களிடம் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மனைவி சரஸ்வதி (65), அதே பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் மனைவி சுலோசனா (69) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்ததுடன், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.