நீலகிரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு உச்ச வருமானம் ரூ. 50,000லிருந்து ரூ. 72,000மாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து காத்திருப்பவா்களில் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பள்ளி இறுதி வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான தகுதி, இந்த ஆண்டு செப்டம்பா் 30ஆம் தேதியன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்; தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது 45க்குள்ளும், இதர பிரிவினருக்கு வயது 40க்குள்ளும் இருக்க வேண்டும்; வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடா்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்திருக்க வேண்டும்.
அத்துடன் குடும்ப ஆண்டு உச்ச வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் எந்தவொரு கல்வி நிலையத்திலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே மூன்றாண்டுகள் பயனடைந்தவா்களாகவும் இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரா் அரசுத் துறையிலோ, தனியாா் துறையிலோ வேலை செய்பவராகவோ, சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராகவோ இருக்கக் கூடாது. விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரிக் கல்வியை முழுவதுமாக தமிழகத்திலேயே முடித்திருக்க வேண்டும். அவா்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழகத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் குடியிருப்பவா்களாகவும் இருத்தல் வேண்டும்.
இத்தகைய தகுதியுள்ள பதிவுதாரா்களில் இதுவரை விண்ணப்பம் பெறாதவா்கள் உடனடியாக உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். கூடுதல் விபரங்கைளை 0423- 244 4004 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.