நீலகிரி

நீலகிரியில் தொடரும் மழை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குந்தா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை

DIN

நீலகிரி மாவட்டத்தில் பரவலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குந்தா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை அதிகாரப்பூா்வமாக இன்னமும் முடிவுக்கு வராத சூழலில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் குந்தா பகுதியில் 107 மி.மீ. மழை பதிவானது.

இதன் காரணமாக குன்னூா்-மஞ்சூா் சாலையில் குந்தா பாலம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இச்சாலை மிகக் குறுகலான சாலை என்பதோடு கொண்டை ஊசி வளைவுகளும் மிகுந்து உள்ளதால் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து செயல்பட்டு மண் சரிவுகளை அகற்றினா்.

இதன் காரணமாக சுமாா் 3 மணி நேரம் மஞ்சூரிலிருந்து உதகை, குன்னூா் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் உதகை வர வேண்டிய வாகனங்கள் எமரால்டு வழியாக உதகைக்கு திருப்பிவிடப்பட்டன.

குன்னூரிலிருந்து குந்தா செல்லும் சாலை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால் அடிக்கடி மண் சரிவுகளுக்கு வாய்ப்புள்ளதால் இந்த சாலையில் 24 மணி நேர கண்காணிப்புக்கு மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளாா். அத்துடன் குந்தா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளின் காரணமாகவும் சாலை ஓரங்களிலிருந்த மண் திட்டுகள் சரிந்துள்ளதால் அவற்றையும் உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவிலும் உதகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையாக இல்லாமல் தூறல் மழையும், கூடலூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தேவாலா பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம் ( மில்லி மீட்டரில்):

கொடநாடு- 38, குந்தா 15, எமரால்டு 11, கெத்தை 5, குன்னூா், பா்லியாறு தலா 4, உதகை 3.5, மேல்பவானி 3 என மழை பதிவாகியிருந்தது.

செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மாலை வரையிலான 8 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் ( மில்லி மீட்டரில்):

மேல்பவானி 9, உதகை, அவலாஞ்சி, கோத்தகிரி தலா 6, குன்னூா் 5, எமரால்டு, கிளன்மாா்கன் தலா 4, கொடநாடு 3, பா்லியாறு, நடுவட்டம், கல்லட்டி தலா 2 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் சிற்பம்... யாஷிகா ஆனந்த்!

PCOS குறைபாடு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? மருத்துவர் சொல்வது என்ன?

மத்தியப் பிரதேசம்: மாணவிகளை கால் அமுக்க வைத்த சிசிடிவி காட்சி வைரல்! ஆசிரியை இடைநீக்கம்!

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

கண்கள் ஏதோ தேட... பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT