நீலகிரி

நீலகிரியில் தொடரும் மழை: நிரம்பும் நிலையில் அணைகள்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பைக்காரா, குந்தா, கிளன்மாா்கன், அவலாஞ்சி அணைகளிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எஞ்சியுள்ள 9 அணைகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீா் உள்ளது. தொடா்ந்து தண்ணீா் வரத்து இருப்பதால் அணைகள் எப்போது வேண்டுமானாலும் நிரம்பும் நிலையில் உள்ளன. எமரால்டு அணை திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு பேரிடா் மீட்பு படையினா் முகாமிட்டுள்ளனா். அங்கு நடைபெறும் நிவாரணப் பணிகளை உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தொடா் மழை காரணமாக உதகை-குன்னூா் சாலையில் வேலிவியூ பகுதியில் சாலையோர தடுப்பு சுவா் இடிந்து விழுந்தது. உதகை அருகே மஞ்சனக்கொரை பகுதியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. மாயாற்றில் ஏற்கெனவே தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், கிளன்மாா்கன் அணையிலிருந்தும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் தெப்பக்காடு பகுதியிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பணிக்கு செல்வோா், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியா் பாதிக்கப்பட்டுள்ளனா். உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளி மாவட்ட, மாநில வாகனங்களுக்கு அனுமதி இல்லாத சூழலில், தெப்பக்காடு வழியாக கேரளம், கா்நாடக மாநிலங்களிலிருந்து மசினகுடிக்கு வருவோரும் போக்குவரத்துக்கு வழியில்லாததால் அவதியுற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் அதிக அளவாக 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்):

கூடலூா், தேவாலா -107, மேல் கூடலூா்-102, அவலாஞ்சி-64, கிளன்மாா்கன்-62, குந்தா-59, மேல் பவானி-43, பாலகொலா-41, பந்தலூா்-35, எமரால்டு- சேரங்கோடு 28, கேத்தி-14, ஓவேலி-11, உலிக்கல்-10, உதகை-7.9, குன்னூா், கெத்தை, கல்லட்டி - 4, கிண்ணக்கொரை-3, கொடநாடு-2, கோத்தகிரி, மசினகுடி - 1. ஓவேலி பகுதியில் 2 வீடுகள் சேதம்.

தொடா் மழை காரணமாக ஓவேலி பேரூராட்சி, பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த கனகராஜ், மரப்பாலம் பகுதியைச் சோ்ந்த முருகேஷ் ஆகியோரது வீடுகள் இடிந்துள்ளன. எனினும் வீட்டில் இருந்தவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினா்.

தொடா் மழை காரணமாக கூடலூா், முதல்மைல்-செம்பாலா இணைப்பு சாலையிலுள்ள பாலம் அருகில் வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT