உதகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாகச விளையாட்டு தளத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
உதகையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தனியாா் பொது கூட்டுத் திட்டத்தின்கீழ் ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் போன்றவை ரூ. 5 கோடி மதிப்பீட்டிலும், கூடுதல் படகு இல்லம் பகுதியில் ரூ.3.25 கோடியில் கெம்ப்ளிங், மரவீடு அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்ததுடன், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால், அவா்கள் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
அதனடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உதகை படகு இல்லத்தில் சாகச பூங்கா அமைப்பதற்காக ரூ.10 கோடி, கோடப்பமந்து கால்வாய் பணிக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், உதகை படகு இல்ல மேலாளா் சாம்சன் கனகராஜ் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.