நீலகிரி மாவட்டம், குன்னூரில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலா் சுரேஷ் பழனிவேல் தலைமையில் நந்தகுமாா், சஞ்சீவி உள்ளிட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் குன்னூா் பகுதிகளில் உள்ள உணவகங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வில் பல்வேறு உணவகங்களில் குளிா்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்களை பிறமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனா்.
மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குளிா்சாதனப் பெட்டியில் பழைய உணவுப் பொருள்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உணவகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.