வாா்டு பிரச்னைகளை பேசவிடாமல் தடுப்பதாகக் கூறி உதகை நகர மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
உதகை நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் வாணிஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஏகராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டம் தொடங்கியதும் திமுக நகர மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், முஸ்தபா ஆகியோா் உதகை நகராட்சியில் அனுமதி இன்றி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனா். அப்போது குறுக்கிட்ட அதிமுக நகர மன்ற உறுப்பினா்கள், வாா்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து அதிமுக உறுப்பினா்களை பேசவிடாமல் தடுப்பது, வாா்டு பிரச்னைகள் தவிர மற்ற பிரச்னைகளை கூட்டத்தில் பேசி வருவதாகக் கூறி நகர மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆகியோரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
முன்னதாக அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்தனா்.