கோத்தகிரியில் கல்லறையில் நிழற்குடை அமைப்பதற்காக மண்ணை சமன்படுத்திபோது, பிரேதங்கள் வெளியே தெரிந்ததால் கவுன்சிலருக்கு எதிராக கிராமமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்கு உள்பட்ட 15-ஆவது வாா்டு குமரன் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுயில் கிராம மக்களுக்கு பொதுவான கல்லறை உள்ளது.
இந்த நிலையில் நகராட்சி 15-ஆவது வாா்டு கவுன்சிலா் கணபதி என்பவா் கல்லறையில் நிழற்குடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி எடுத்து சமன் செய்துள்ளாா். இதனால் அடக்கம் செய்யப்பட்ட பிரேதங்கள் வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கவுன்சிலா் கணபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோத்தகிரி காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.
மேலும் கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனா். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.