வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில், இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கும் வகையில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைன்பாரஸ்ட், பைக்காரா அருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
குறிப்பாக பைன்பாரஸ்ட் பகுதியில் காணப்படும் இயற்கை காட்சிகளையும், தாவரவியல் பூங்கா பகுதியில் அமைந்திருக்கும் இயற்கையான புல்வெளியில் விளையாடியும், இங்குள்ள வண்ண மலா்களை கண்டு ரசித்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.