உதகை: நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.
இது குறித்து வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பைன் ஃபாரஸ்ட், எட்டாவது மைல் ட்ரீ பாா்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி மற்றும் கெய்ரன் ஹில் ஆகிய சூழல் சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலைமுதல் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், காற்றின் தாக்கமும் காணப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு வனத் துறையின் கட்டுப்பாட்டில் உதகையில் உள்ள 5 சுற்றுலாத் தலங்கள் ஒரு நாள் மட்டும் புதன்கிழமை காலைமுதல் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல லேம்ஸ்ராக் சூழல் சுற்றுலாத் தலம் பகுதியில் நிலவிய காற்று மற்றும் மழை காரணமாக புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மூடப்பட்டது.