முகப்பு
திருப்பூர்

உள்நாட்டு வர்த்தகத்திற்கு மாறிவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

உலக வர்த்தக வரைபடத்தில் தனக்கென முத்திரை பதித்துள்ள பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் ஏற்றுமதியாளர்கள், உலகநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தால் தற்போது உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கி உள்ளனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

உலக வர்த்தக வரைபடத்தில் தனக்கென முத்திரை பதித்துள்ள பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் ஏற்றுமதியாளர்கள், உலகநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தால் தற்போது உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கி உள்ளனர்.

பனியன் நகரமான திருப்பூரில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரத்து 500 கோடி அளவிலும், உள்நாட்டு பனியன் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி அளவுக்கும் நடைபெற்றுவருகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் விற்பனைக் களமாக விளங்கிவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிவரும் பொருளாதார வீழ்ச்சி, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், இதைச் சார்ந்த பனியன் உபதொழில் நிறுவனங்கள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்களில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் இங்கு தொழிலாளர்களாகவும், தொழில்முனைவோராகவும் உள்ளனர்.

ஆண்டு முழுவதும் "வேலைக்கு ஆட்கள் தேவை' என்ற அறிவிப்புகள் தொங்கவிடப்பட்டிருந்த இந்நகரில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போதிய வேலையில்லாத காரணத்தால் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.

கடந்த ஓராண்டாக பனியன் நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன. பஞ்சு ஏற்றுமதி, நூல் ஏற்றுமதி, அவற்றின் விலை உயர்வு, சாய ஆலை பிரச்னை, மின்வெட்டு, தொழிலாளர் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது பனியன் நகரமான திருப்பூர்.

இதிலும், உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களைக் காட்டிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியது:

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், 30 சதவீத ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டு வர்த்தகத்திற்கு மாறி உள்ளனர். உள்நாட்டு வர்த்தகத்தில் உள்ளாடைகளை விற்பது போன்று, வெளிநாடுகளுக்காகத் தயாரிக்கப்படும் ஃபேஷன் ஆடைகளை உள்நாட்டில் விற்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர் ஏற்றுமதியாளர்கள்.

இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பில் இருந்த உள்நாட்டு வர்த்தகம் தற்போது ரூ. 11 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இதுவரை வெளிநாட்டு ஆர்டர்களுக்காக சிரமப்பட்டுவந்தனர். தற்போது நிதர்சனத்தை உணர்ந்து, உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்மூலமாக வருங்காலத்தில் திருப்பூர் வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பலவிதமான ஃபேஷன் பின்னலாடைகளை அணிகின்றனர். இதற்காக புதுவிதமான ஆடை வடிவமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. திருப்பூர் நகரை ஆடை வடிவமைப்பு மையமாக மாற்றும் வகையில், தமிழக அரசு இந்நகரில் ஆடை வடிவமைப்புக் கல்லூரியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →