தரமற்ற உணவுப் பொருள்கள் மற்றும் கலப்படம் குறித்த புகார்களைத் தெரிவிக்க கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ்அப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்ததாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள், உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு, உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்கு விற்றுகொள்முதல் ரூ. 12 லட்சத்துக்கு கீழ் தொழில் செய்யும் உணவு வணிகர்கள் இ- சேவை மையங்கள் மூலமாக பதிவுச் சான்று பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பாதுகாப்பு உரிமம், பதிவு பெற www.foodlicensing.fssai.tn.gov.in., என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகார்களைத் தெரிவிக்க புதிய கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்) எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் பேக்கரி கடைகளில் பொட்டலம் கட்ட செய்தித் தாள்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, பொட்டலம் கட்டுவதால் செயத்தித் தாளில் உள்ள மையில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் உணவுப் பொருளில் கலந்து புற்று நோய், கல்லீரல், மூளை நரம்பு நோய் பாதிப்புகள், செரிமான குறைபாடுகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. எனவே, செய்தித்தாள், பிளாஸ்டிக் தாள்களை தவிர்த்து, பாக்குமட்டை, தேக்கு இலைகளை பயன்படுத்தலாம்.
தேநீர், பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட சூடான உணவுப் பொருள்களை பார்சல் செய்வதற்கு பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. சாலையோர தள்ளுவண்டி கடைகளில் ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துதல், செயற்கை நிறமூட்டிகள் போன்றவை சேர்த்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது. கோடைக் காலங்களில் விற்பனை செய்யப்படும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், தரமில்லாத குடிநீர் கேன்கள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற கட்செவிஅஞ்சல் எண்ணில் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.