அமராவதி ஆற்றில் இருந்து தனியார் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.சௌந்திரராஜன் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்திக்கு அனுப்பி வைத்துள்ள மனு விவரம்:
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து மடத்துக்குளம் வட்டம் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில் இருந்து அரசின் அனுமதியோடு கிணறுகள் தோண்டி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மொத்தம் 14 தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தண்ணீர் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். அமராவதி ஆற்றுப் பாசனத்தால் மூன்று போகம் நெல் மற்றும் கரும்பு விளையும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விளைநிலங்கள், தற்போது நிலவும் கடும் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதால் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், பொது மக்கள், விவசாயிகள், கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே, அமராவதி ஆற்றின் வழியோரக் கிராமங்களில் நேரில் கள ஆய்வு செய்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தமிழக முதல்வர், பொதுப் பணித் துறைச் செயலர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.