நீர்வழிப் புறம்போக்குகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மாவட்டத்தில் முழுநேரமும் செயல்படும் விதமாக கட்டுப்பாட்டு அறை, வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட வேண்டும்.
மேலும், வெள்ளம் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்படும் அனைத்து இன்னல்களையும், இழப்புகளையும் எதிர்கொள்ளும் விதமாக, மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்வு வசதிகள், வாகனங்கள் அனைத்தும் இயங்கக் கூடிய நிலையில் உள்ளதை ஊர்ஜிதம் செய்திட வேண்டும்.
வெள்ள சேதம், கால்நடை இறப்பு போன்ற தகவல்களை பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதோடு, அளிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அறிக்கை அனுப்ப வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற இலவச அழைப்பு மற்றும் 0421 - 2971199 ஆகிய எண்களுக்கு சார்நிலை அலுவலர்கள், வெள்ளம் பற்றி பெறப்படும் செய்திகளையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரங்களையும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
உரிய நிவாரணம் வழங்கப்படும் இனங்களில், வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி 24 மணி நேரத்துக்குள் வழங்கி, அதன் விவரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களின் நீர்மட்டத்தினை உன்னிப்பாக கண்காணிப்பதோடு, நீர்வழிப் புறம்போக்குகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும்.
மனித உயிர் இழப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால் அவர்களது வாரிசுதாரர் குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய அரசு நிவாரணம் வழங்க தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அமராவதி நீர்த் தேக்கத்தில் உள்ள படகுகள் மற்றும் நீர் மிதவைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றை இயக்குபவர்களின் அழைப்பு எண்களை தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
பொதுப் பணித் துறையினர் (நீர்வள ஆதார அமைப்பு) தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் கொள்ளளவு, நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை குறித்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்த்தேக்கங்களின் கதவுகள் மற்றும் மடைகள் உடனடியாக பழுது நீக்கம் செய்யப்பட்டு நன்கு இயங்கும் நிலையில் உள்ளதை உறுதி செய்வதோடு, நீர்வழிப் பாதையில் அரிப்பு ஏதேனும் காணப்படடால், அதனை உடனடியாக செப்பனிட வேண்டும். நீர்த்தேக்கங்களில் வெள்ள அபாய நிலையைத் தொடும் பொழுது, அதுபற்றிய விவரத்தை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமப் பொதுமக்களுக்கும் முன்கூட்டியே தெரிவித்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, சார் ஆட்சியர்கள் ஜெ.ஷ்ரவண்குமார் (திருப்பூர்), கிரேஸ் பச்சாவு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், துணை ஆட்சியர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.