திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 4 தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு

DIN

வெள்ளக்கோவிலில்  பொதுமக்கள் 4 தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போலீஸில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் 250 சிறிய, பெரிய நூல் மில்கள், 5 பெரிய சமையல் எண்ணெய் ஆலைகள், 10 ஆயிரம் விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இப்பகுதியில் பாறைகளைப் பெயர்த்து ஜல்லி கற்கள், கிரஷர் மணல் (எம். சாண்ட்) தயாரிக்கும் கிரஷர்களும் உள்ளன.
தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வெள்ளக்கோவில் நகர மக்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அமராவதி குடிநீர்த் திட்டம் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பல மாதங்களாக மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்று விட்டது. அமராவதி ஆற்றிலிருந்தும் தண்ணீர் அறவே கிடைப்பதில்லை. காவிரி ஆற்றிலிருந்து கிடைக்கும் நீர் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், நகரின் 35 சதவீதத் தண்ணீர்த் தேவை தண்ணீர் லாரிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.  இப்பகுதியில் கீழ்பவானி, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பாயும் பகுதிகளிலுள்ள தனியார் கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீரைத் தவிர்த்து தொழிற்சாலைகளுக்கு வணிக நோக்கில் அதிக அளவில் லாரிகள் மூலமாக தண்ணீர் விற்கப்படுகிறது. இதற்காக கிணறுகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது. தங்களது பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக ஊர் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மாந்தபுரத்திலுள்ள கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்படுவதில்லை. பிற பகுதிகளில் லாரிகள் மூலமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் லாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் சாலை சேமலைக்கவுண்டன்வலசில் உள்ள சில தனியார் விவசாயக் கிணறுகளிலிருந்து லாரிகளுக்குத் தண்ணீர் விற்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து 4 தண்ணீர் லாரிகளை திங்கள்கிழமை சிறைபிடித்தனர். 
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.  பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கெளசல்யா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸ்  விசாரணையில், 4 தண்ணீர் லாரிகள் அனுமதி எதுவும் பெற்றிருக்கவில்லை எனத் தெரியவந்தது. இதில் குடிநீர்ப் பயன்பாட்டுக்குத் தண்ணீர் கொண்டு சென்ற ஒரு லாரி உடனடியாக விடுவிக்கப்பட்டது. மற்ற மூன்று லாரிகள் போலீஸார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தில்லி தீயணைப்பு துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்!

கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

நடமாட முடியவில்லை!

பூவனூா் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT