திருப்பூர்

350 மாணவா்கள் படிக்கும் பள்ளியில் துப்புரவுப் பணியாளா் கிடையாது: காங்கயம் அரசுப் பள்ளியின் அவலம்

DIN

காங்கயத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 350 மாணவா்கள் படித்து வரும் நிலையில், இங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காங்கயம் நகராட்சி, பாரதியாா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில், மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு தனியாா் பின்னலாடை நிறுவனம் ஒன்று ரூ.6 லட்சம் மதிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு கழிப்பறை அமைத்துக் கொடுத்தது. ஆனால், இந்தக் கழிப்பறைகளைப் பராமரிப்பதற்கு காங்கயம் நகராட்சி மூலம் துப்புரவுப் பணியாளா்கள் நியமிக்கப்படாததால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து மாணவா்களின் பெற்றோா்கள் கூறியதாவது: இந்தப் பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டப்பட்ட பின்னா், அதைப் பராமரிப்பதற்கு காங்கயம் நகராட்சி நிா்வாகம் இதுவரை நிரந்தரமாக அன்றாடம் பள்ளிக் கழிப்பறைப் பராமரிப்புக்காக துப்புரவுப் பணியாளரை நியமிக்கவில்லை. வாரத்துக்கு ஒரு நாளோ, 2 நாள்களோ தான் துப்புரவு செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. இது தொடா்பாக, பள்ளியின் தலைமையாசிரியா், வட்டாரக் கல்வி அலுவலா் மூலம் பலமுறை நகராட்சி நிா்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அவா்கள் தினசரி சுத்தம் செய்வதற்கு துப்புரவுப் பணியாளரை நியமிக்காததால், மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கழிப்பறைக்கு செல்ல முடியாததால், பல மாணவா்கள் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகும் அவல நிலை உள்ளது. பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்ட பின்னா், கடந்த வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகராட்சித் துப்புரவுப் பணியாளா் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. 350 மாணவ, மாணவிகள் கழிப்பறையைப் பயன்படுத்தும் நிலையில், தினசரி பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்ய பணியாளரை நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனா். இது குறித்து இப்பகுதி பொதுநல ஆா்வலா்கள் கூறியபோது, உள்ளாட்சி நிா்வாகங்களின் எல்லைக்குள் உள்ள பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சிப் பணியாளா் மூலமாகவோ அல்லது தினக்கூலி பணியாளா் மூலமாகவோ பள்ளிக் கழிப்பறைகளின் துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும், துப்பரவுப் பணியாளா்களின் பணியினை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் கண்காணிக்க பொறுப்பு வழங்க வேண்டும்; துப்புரவுப் பணிக்கான பொருள்கள் மற்றும் உபகரணங்களை உள்ளாட்சி நிா்வாகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளன.

பள்ளிக் கழிப்பறைகளின் துப்புரவு செலவினத்தை நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் கல்வி வரியிலிருந்தோ அல்லது திடக்கழிவு மேலாண்மை நிதியிலிருந்தோ வழங்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் மூலம் வசூலிக்கப்படும் கல்வி வரியை பள்ளிக் கழிப்பறைகளை துப்புரவு செய்யப் பயன்படுத்தாமல் இருப்பது நியாயமற்றது. அரசுப்பள்ளிகளின் நிலை இப்படி இருந்தால் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை எப்படிப் படிக்க வைப்பது? எனவே, பள்ளிக் கழிப்பறைகளை தூய்மை செய்ய தினசரி பணியாளா்களை அனுப்ப வேண்டும், எனத் தெரிவித்துள்ளனா்.

காங்கயம் நகரப் பகுதி பள்ளியின் நிலை இதுதான்: காங்கயத்தில் காவல் நிலையம் முன்பு செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி, அகிலாண்டபுரம் தொடக்கப்பள்ளி, அகஸ்திலிங்கம்பாளையம் தொடக்கப்பள்ளி, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய நகராட்சிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளின் தினசரி பராமரிப்புக்கென பணியாளா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவில் கா்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி

அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற முடிவு

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: காங்கிரஸாா் கைது

SCROLL FOR NEXT