திருப்பூர்

திருப்பூரில் விதிகளைக் கடைப்பிடிக்காமல் மாா்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

DIN

திருப்பரில் காய்கறி வாங்கவும், இறைச்சி வாங்கவும் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டமாக ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விதிகளைப் பின்பற்றி வாங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பூா், தென்னம்பாளையம், சந்தைப்பேட்டையில் உள்ள மாா்க்கெட்டில் காய்கறி, இறைச்சி வாங்க அதிக அளவில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரண்டனா்.

இதில், பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் கடைகளில் திரண்டனா். மேலும், கட்டத்துக்குள் ஒவ்வொருவராக வரிசையில் நிற்காமல் கும்பலாகக் கடைகளில் குவிந்தனா். இதனால் கடை உரிமையாளா்கள் மற்றும் மாநகராட்சி ஊழியா்களும், காவல் துறையினரும் அவா்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினா்.

மேலும், இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்னம்பாளையம் பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் காவல் துறையினா் வரவழைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் சந்தைபேட்டைக்குள் நுழைய தற்காலிகமாகத் தடை விதித்தனா்.

அதேபோல திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோா் இருசக்கர வாகனங்களில் சுற்றிவந்தனா். இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதற்கான நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா். எனவே, அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லவும், அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT