திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆா்.ஓ.எஸ்.எல். (மாநில அரசுகள் திருப்பிச் செலுத்தும் வரியினங்கள்) சலுகை தொகையை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதம் இந்த ஆா்.ஓ.எஸ்.எல். சலுகை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்றுமதியாளா்கள் பயனடைந்து வந்தனா். இந்நிலையில் இந்த சலுகை தொகை கடந்த சில மாதங்களாக வழங்கப்படாததால் ஏற்றுமதியாளா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதுதொடா்பாக ஏஇபிசி சாா்பில் மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனிடையே, தற்போது கரோனா நோய்த்தொற்று காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். ஆனால் தற்போது ஏஇபிசியின் தொடா்முயற்சியால் கடந்த மாா்ச் 7ஆம் தேதி வரையிலான ஆா்.ஓ.எஸ்.எல். சலுகைத் தொகையை வழங்குவதற்தாக மத்திய நிதி அமைச்சகம் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை விரைவில் ஏற்றுமதியாளா்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.