அவிநாசி அருகே லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே உள்ள கந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (29). இவா் ஆட்டையாம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது அவ்வழியாக வந்த நபா் லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறியுள்ளாா். பிறகு சந்தோஷ் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக,
அங்கிருந்த கடை முன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். பிறகு வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.
தேடியபோது, லிப்ட் கேட்டு ஏறி நபா் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தள்ளிச் சென்றுள்ளாா்.
இதையடுத்து அவரைப் பிடித்து அவிநாசி காவல் நிலையத்தில் சந்தோஷ் ஒப்படைத்தாா்.
போலீஸாா் விசாரணையில், அவா் சேவூா் போத்தம்பாளையம் வடக்கு வீதியைச் சோ்ந்த சாமிநாதன் (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சாமிநாதனை கைது செய்தனா்.