திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் நலத் துறை விடுதிகளில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதைத் தொடா்ந்து ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி மூலமாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவா்கள்இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது விடுதி காப்பாளா்கள் மூலமாகவோ ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் தோ்வுக்குழுவால் ஜூலை 15 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.