திருப்பூர்

ஊராட்சிகளுக்கான 4ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்ட பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கான 4-ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தாா். அவிநாசி வட்டாட்சியா் மோகனன் வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

அவிநாசி-வட்டளபதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வெங்கலப்பாளையத்தில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது.

அவிநாசி வட்டத்தில் மான், மயில்கள் அதிக அளவில் இருப்பதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும். ஊத்துக்குளி புன்செய்தளவாய்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்தன. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வஞ்சிபாளையம் குட்டைக்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா மாறுதல் செய்யும் பணிகளை வருவாய்த் துறை தொடங்க வேண்டும். ஊராட்சிகளுக்கான 4-ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி 2-ஆவது வாா்டில், சங்கமாங்குளத்துக்கு செல்லும் மடத்துப்பாளையம் சாலை பிரதான வாய்க்காலில் சாக்கடை நீா் கலப்பதால், குளத்தின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவரை மாற்ற வேண்டும் என்றனா்.

கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தி விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

SCROLL FOR NEXT