தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா், ஆணையாளா் எம்.பி.அமித் ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலமாக 100 சதவீதம் குப்பை தரம் பிரிக்கப்பட்ட மாநகராட்சி என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநகராக மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து, அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு மாற்று பொருள்களை பயன்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் இனிவரும் காலங்களில் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், தொ்மாக்கோல் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்டகாகித குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் , பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீா் குவளைகள், உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், தூக்குப் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்காத வாழை இலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், தாமரை இலை, மூங்கில் மரம், மண் பொருள்கள், மஞ்சப்பை (துணிப்பை) , காகிதம் மற்றும் சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள் மற்றும் மண் குவளைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
திருப்பூா் மாநகராட்சியை 2026 ஜனவரி 1-ஆம் தேதி அன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநகராட்சியாக மாற்ற, பொதுமக்கள் நெகிழிப் பொருள்களுக்கு பதிலாக மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு குறித்த புகாா்களை 155304, 1800 425-7023, 0421 2321500 ஆகிய இலவச எண்களில் தெரிவிக்கலாம் என்றனா்.