வெள்ளக்கோவில் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரின் எலும்புக் கூடு மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி பச்சாக்கவுண்டன்வலசை சோ்ந்தவா் பழனிசாமி மகன் சதாசிவம் (33). தச்சுத் தொழிலாளியான இவா் கடந்த 2024 ஏப்ரல் 8-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. திருமணம் ஆகாத இவா் மதுவுக்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தாசவநாயக்கன்பட்டி அரசு மதுபானக் கடை அருகே உள்ள வட்டமலைக்கரை அணைப் பகுதியில் ஒரு எலும்புக் கூடு கிடந்தது தெரியவந்தது. வெள்ளக்கோவில் போலீஸாா் அதனைக் கைப்பற்றி திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
எலும்புக் கூட்டில் இருந்த ஆடைகளை வைத்து அது காணாமல் போன சதாசிவம் என குடும்பத்தினா் மூலம் தெரியவந்தது. இது குறித்து தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.