பொதுப் பிரச்னைக்கு கட்டணம் வசூல் செய்து, பணி மேற்கொள்ளாமல் மாவட்ட நிா்வாகத்திடம் தவறான தகவலை மின்சார வாரியம் தெரிவித்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அங்கேரிபாளையம் பிரதான சாலையில் ஸ்ரீநகா் சந்திப்பு அருகே மாநகராட்சி சாலையின் மேல் பகுதியில் உயா் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் தினமும் அந்த வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதுடன், மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் இருந்தது.
இது குறித்து வால்ரஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிவபெருமாள் டேவிட், திருப்பூா் நகர வடக்கு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு புகாா் தெரிவித்திருந்தாா். அப்போது மின் கம்பிகளை உயா்த்த வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனா். இதையடுத்து கடந்த 2024 ஜூலை மாதம் சிவபெருமாள் டேவிட் ரூ.2 லட்சத்து 19,779 செலுத்தி உள்ளாா். இந்தத் தொகையை செலுத்திய பின்னரும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, பணி நடைபெறாதது குறித்து சிவபெருமாள் டேவிட் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது, சரியான உயரத்தில்தான் செல்கிறது என்ற தவறான தகவலை மின்சார வாரியம் கூறியுள்ளது. ஆனால், 22 அடிக்கு பதிலாக 14 அடியில் மின்கம்பி செல்வது தெரியவந்தது. இதில் மின்வாரியம் தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. மேலும், பொதுப் பிரச்னைக்கு மின்வாரியம் கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, மின்கம்பி தாழ்வாக செல்வது குறித்து, உதவி செயற்பொறியாளரிடம் விசாரணை நடத்தப்படும். மிக உயரமான மின்கம்பம் இருப்பு இல்லாததாலேயே, அந்தப் பணி தாமதமானது, இருப்பினும் அடுத்த ஒரு வாரத்துக்குள் மின்கம்பம் உயரமாக மாற்றி அமைக்கப்படும் என்றாா்.