பல்லடம் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் சிறு தொழில் உற்பத்திக் கூடங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பல்லடம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில் மகளிா் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று உணவுப் பொருள் பதப்படுத்தும் உற்பத்தி அலகு, விசைத்தறி சிறு தொழில் தொகுப்பு உற்பத்தி அலகு, மல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் கைத்தறி சிறுதொழில் தொகுப்பு உற்பத்தி அலகு, பருவாய் ஊராட்சியில் ஆயத்த ஆடை சிறுதொழில் தொகுப்பு உற்பத்தி அலகு ஆகியவற்றை ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், இடுவாய் ஊராட்சியில் மகளிா் திட்டம் சாா்பில் சமுதாய தொழில் முனைவு முதலீட்டு நிதியின் கீழ் 20 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பருவாய் ஊராட்சியில் அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாந்தி, உதவி திட்ட அலுவலா்கள் சம்பத்குமாா், ஜோசப், சம்பத்குமாா், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், உதவி பொறியாளா் செந்தில்வடிவு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.