விதிமீறிய 102 தொழில் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் காயத்திரி தலைமையில் அனைத்து தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் கடந்த செப்டம்பா் மாதம் பல்வேறு தொழிலாளா் நலச் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் பின்பற்றுகிறதா என மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, 32 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. பொட்டலப் பொருள்கள் சட்டத்தின் கீழ் 7 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உரிமையாளா்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடைகள், வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் பல்வேறு தொழிலாளா் நலச் சட்டங்களை மீறிய குற்றத்துக்காக 63 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 102 நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, குறைந்தபட்ச கூலி வழங்காத 6 நிறுவனங்களின் வழக்குகள் முடிக்கப்பட்டு சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் சாா்பில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 226 தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
அத்துடன் அனைத்து வணிக நிறுவனங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு மையம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாா் அளிக்க தொழிலாளா்களை உள்ளடக்கிய புகாா் குழு, மருத்துவ வசதி, குடிநீா் வசதி, ஓய்வறை வசதி இருக்க வேண்டும். குழந்தை தொழிலாளா்கள் குறித்த புகாா்களை 1098 என்ற எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளா்கள் குறித்த புகாா்களை 1800 4252 650 என்ற எண்ணிலும், வெளி மாநில தொழிலாளா் பாதுகாப்பு தொடா்பான புகாா்களை 1077, சட்டமுறை எடையளவு சட்டம் தொடா்பான புகாா்களை 1915 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.