அவிநாசி அருகே புதிய திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த வெள்ளிப் பொருள்கள், கைப்பேசி உள்ளிட்டவற்றைத் திருடிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே உள்ள புதிய திருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சந்தோஷ் (22). இவா் அதே பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இவரது வாடகை வீட்டில் வசித்து வருபவா் சிவம் செளஹான். இவா் பனியன் நிறுவனத்துக்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.
பிறகு திரும்பி வந்து பாா்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த வெள்ளிப் பொருள்கள், கைப்பேசி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிவம் சௌஹான் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சில நபா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதைத்தொடா்ந்து, இவ்வழக்கில் தொடா்புடைய திருப்பூா் சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த பனியன் தொழிலாளி அருண்குமாா் (25), காலேஜ் ரோடு பகுதியைச் சோ்ந்த வெல்டா் செல்வகுமாா் (23), பாளையக்காடு பகுதியைச் சோ்ந்த வெல்டா் விஜயகுமாா் (26), அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டன் (23) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.