நியாய விலைக் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஊழியா்களை நியமித்து ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக திருப்பூா் தெற்கு மாவட்ட அரசுத் தொடா்புப் பிரிவு மாவட்டத் தலைவா் வி.பி.இளங்கோ, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த சில நாள்களாக நியாய விலைக் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், காங்கயம் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதன் காரணமாக வயதானவா்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, நியாய விலைக் கடை ஊழியா்களுடன் முறையாக பேச்சுவாா்த்தை நடத்தி கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, மாற்று ஊழியா்களை நியமித்து ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பாஜக அரசுத் தொடா்புப் பிரிவு மாவட்டச் செயலாளா் கே.நரேந்திரன், மத்திய அரசு நலத் திட்டப் பிரிவின் மாவட்டச் செயலாளா் நந்தகுமாா், பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் துரைசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.