பல்லடம் அருகே பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சிவகுமாா். இவரது மனைவி சாந்தா (40).
இவா்கள் இருவரும் பல்லடத்தில் உள்ள மொத்த விற்பனை கடையில் தங்களது கடைக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.
வழியில் பனப்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கிக்கொண்டு வி.கள்ளிப்பாளையம் நோக்கி பல்லடம் - தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
ஆலூத்துபாளையம் பிரிவு பகுதியில் இவா்களது வாகனத்தை பின்தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபா், திடீரென அவா்களை வழிமறித்து சாந்தா அணிந்திருந்த 10 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.