வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் 152 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி சிலம்பகவுண்டன்வலசில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ.பிரபாகா் ஏற்பாட்டின்பேரில், வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10- ஆம் வகுப்பு வரை படிக்கும் பெற்றோரை இழந்த, ஒற்றைப் பெற்றோா் கொண்ட, பெற்றோரை பிரிந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
அனைத்துப் புத்தாடைகளும் நன்கொடையாளா்களை அணுகி அவா்கள் மூலம் பெறப்பட்டன. தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக இவ்வாறு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக சீருடைகள் வழங்குவதுபோல, வருடத்தில் ஏதாவது ஒரு பண்டிகைக்கு புத்தாடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிகழ்ச்சியில் பேசியவா்கள் குறிப்பிட்டனா்.
நாகமநாயக்கன்பட்டி, பச்சாபாளையம் ஊராட்சியைச் சோ்ந்த 20 தூய்மைப் பணியாளா்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.