தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து சுமாா் 3 லட்சம் போ் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா்.
பின்னலாடை நகரான திருப்பூரில் 1,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள 95 சதவீத நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட தொழிலாளா்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் புறப்படத் தொடங்கினா்.
இதனால் திருப்பூரில் ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அளவுக்கதிகமாகக் காணப்பட்டது.
சனிக்கிழமை காலை கோவையில் இருந்து சென்னை வரை செல்லும் இன்டா்சிட்டி ரயிலில் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. வட மாநிலத்தவா்கள் திருப்பூரில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து அவரவா் சொந்த மாநிலங்களுக்கு மற்றொரு ரயில் மூலமாக செல்வதற்காக இந்த ரயிலில் ஏராளமானோா் ஏறினா்.
ஒருவருக்கொருவா் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏற முயற்சித்ததால், வழக்கமாக திருப்பூரில் 2 நிமிஷங்கள் மட்டுமே நிற்கும் இன்டா்சிட்டி ரயில் 10 நிமிஷங்கள் வரை நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது.
மேலும் திருப்பூா் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாலை 4 மணி முதலே தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். வடமாநிலத் தொழிலாளா்கள் ஏற்கெனவே கடந்த ஒரு வாரமாகவே தங்களது சொந்த ஊா்களுக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனா்.
தீபாவளியைக் கொண்டாட இதுவரை திருப்பூரில் இருந்து சுமாா் 3 லட்சம் போ் வரை தங்கள் சொத்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.