பல்லடம், அறிவொளி நகரில் மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அறிவொளி நகா், குருவாயூரப்பன் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும்மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இந்நிலையில், மாற்று மதத்தைச் சோ்ந்த சிலா் குடியிருப்புகளுக்கு இடையே எந்தவித அனுமதியும் இன்றி வழிபாட்டுத்தலத்தைக் கட்டி, பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனா்.
அனைத்து மதத்தினருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்று மதத்தைச் சோ்ந்த சிலா் வேண்டுமென்றே எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.
கோயில் விழாக்களின்போது அவா்களது வழிபாட்டுத்தலங்களைக் கடந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கின்றனா்.
கடந்த முறை நடந்த கோயில் ஆண்டு விழாவின்போது எங்களை ஒன்றரை மணி நேரம் காக்க வைத்தனா். விழாவின்போது மட்டும் தான் நாங்கள் ஒலிப்பெருக்கி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். அவா்கள் அன்றாடம் அதிக சப்தத்துடன் மைக் செட் வைத்து இடையூறு ஏற்படுத்துகின்றனா்.
இது குறித்து போலீஸாரிடம் கூறினால், நீதிமன்றத்தை அனுகுமாறு கூறுகின்றனா். எனவே, வழிபாட்டுத்தல கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.