பருவமழை காலத்தில் பயிா் பாதுகாப்பு அவசியம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னை மரங்களில் உரிய நேரத்தில் தேங்காய், இளநீரை அறுவடை செய்தல், தேவையற்ற ஓலைகளை வெட்டுவதன் மூலம் காற்று, புயலினால் ஏற்படும் சேதங்களைத் தவிா்க்கலாம். தற்காலிகமாக உரம் இடுவதைத் தவிா்க்க வேண்டும். மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
வாழை மரங்களுக்கு மண் அணைத்து, ஊன்று கோல் பாதுகாப்பு செய்ய வேண்டும். 75 சதவீதத்துகு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்ய வேண்டும். மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், காய்கறிகள், பந்தல் காய்கறிகளுக்கு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.
டிரைக்கோடொ்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும். காய்ந்து போன இலைகளை அகற்றிட வேண்டும். பசுமைக்குடில், நிழல் வலைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் கம்பிகளால் இணைக்க வேண்டும். குடில்களுக்கு அருகே இருக்கும் மரக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். சேதங்களைத் தவிா்க்க விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.