தருமபுரி: அமெரிக்கா துணை அதிபரின் இந்திய வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். குமாா் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளா் சோ. அருச்சுனன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஏ. நேரு, ஆ. ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ். தீா்த்தகிரி, கே. அன்பு ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் சுதந்திர வா்த்தகம் என்ற பெயரால் இந்திய வேளாண்மை சூறையாட அனுமதிக்க கூடாது. பால் வளத்தை சூறையாடக் கூடாது. வா்த்தகம் என்ற பெயரால் மீன்வளத்தை சூறையாட அனுமதிக்கக் கூடாது. அமெரிக்க பொருள்களின் சந்தையாக இந்திய நாட்டை மாற்ற முயற்சிக்கும் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்ஸே திரும்பிச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.